தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Update: 2021-06-13 07:13 GMT

தமிழகத்தில் நாளை முதல் குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளை (ஜூன் 14) காலை முதல் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வருகிற 21 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் புதிய தளர்வுகளையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட உள்ளது. இதற்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை மட்டும் செய்ய வேண்டும்.

ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

மதுபானம் வாங்க வருவோர் வரிசையில் நிற்க ஏதுவாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை இரண்டு பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News