வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்க முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட அறிவிப்பு

Update: 2021-06-12 07:58 GMT

வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்க முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடன் தவணை செலுத்துவதற்கு புதிய கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய முழு ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் கொரோனா இரண்டாம் அலையை காரணம் காட்டி கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிதிசார் விவகாரங்களில் நாங்கள் நிபுணர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர்.

Similar News