தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு, மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்ட படி மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டது. காய்கறி, மளிகை, மருந்து, பாலகம் போன்ற கடைகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை அனுமதி அளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டது. ஊரடங்கு அமலில் உள்ள போதும் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்தது. இதனால் தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் 7 முதல் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அரசு அனுமதித்தது.
இந்த தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்தது வந்தது. நோய்த்தொற்று அதிகம் இல்லாத பகுதிகளுக்கு மட்டும் அரசு தளர்வுகளை அளித்து வருகிறது. இ-பதிவுடன் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவர்கள் இ- பதிவு பெற்று தொழிலை தொடங்க அரசு அனுமதித்துள்ளது.
அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் 30% பணியாளர்களுடன் பணி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூன் 21ம் தேதி அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்ட படி, மது வகைகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு கடைகளை திறக்க வேண்டும். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.