நெல்லை-மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி மரணம்
நெல்லையில் மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மரத்தில் சிக்கிய பட்டத்தை இரும்புக் கம்பி கொண்டு எடுக்க முயன்றபோது மின் வயரில் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி மரணம்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மபிரபு ஆட்டோ ஓட்டி வருகிறார். தர்மபிரபுவின் மகன் மாதவன்(14) அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழ்நிலையில் சிறுவன் மாதவன் இன்று வீட்டின் மொட்டை மாடியில் நின்றபடி நூலில் பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்தான். அப்போது பட்டம் அருகில் இருந்த மரத்தில் சிக்கியதையடுத்து இரும்பு கம்பியை கொண்டு பட்டத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது வீட்டின் சுவருக்கும், மரத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்த மின் வயரில் சிறுவன் வைத்திருந்த இரும்பு கம்பி உரசியபோது கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் மாதவன் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டான். அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் மாதவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மரத்தில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாதவன் போன்ற சிறுவர்கள் பொழுது போக்கிற்காக விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த விளையாட்டு சில நேரங்களில் இதுபோன்று விபரீதமாக முடிவதால் ஊரடங்கு நேரத்தில் பெற்றோர்கள் அதிக கவனமுடன் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்ற பாடத்தை உணர்த்துவதாக இச்சம்பவம் அமைந்துள்ளது.