தமிழக மருத்துவமனைகளில் 45,484 காலி படுக்கைகள் - அமைச்சர் தகவல்

Update: 2021-06-10 10:39 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தது வருவதால் மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட பணியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கானது ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த தொடர் முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை கூறுகிறது. ஊரடங்கிற்கு முன் 35 ஆயிரமாக இருந்த ஒரு நாள் பாதிப்பு இன்று 18 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக குணமடைவோர் விகிதமும் அதிகரிக்கிறது. நேற்று மட்டும் 31,652 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள மருத்துவனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்படுவதன் காரணமாவும் தொற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் தேவையான ஒதுக்கீடுகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம். அரசின் அறிவுரைகளை அனைவரும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரைவில் ஒழிக்க முடியும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 13ம் தேதிக்குள் 6 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் கொரோனா 2வது அலை குறைந்து வருவதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News