இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழவிருக்கிறது. இந்த நிகழ்வையும் உலகின் சில பகுதிகளில் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என நாசா குறிப்பிட்டுள்ளது.என்றாலும் இணையத்தில் காணலாம். Timeanddate.com இணையத்தில், https://www.timeanddate.com/live/eclipse-solar-2021-june-10 இணைய முகவரியில் நேரலை ஏற்பாடுகளை பகிர்ந்திருக்கிறது.
சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 10-ம் தேதி (நாளை) நிகழவுள்ளது.
சூரியனின் ஒளியை நிலவு மறைக்கின்ற இந்த நிகழ்வு மூன்று வகையாக நிகழும். அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். நிலவானது சூரியனை முழுவதுமாக மறைப்பது முழு சூரிய கிரகணம். சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90% பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வாகும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், கனடாவின் சில பகுதிகளில், கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் சில பகுதிகள், வடக்கு அலாஸ்கா, கனடாவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும்.
இந்த வளைய சூரிய கிரகணம் ஜூன் 10, 2021 இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 வரை நிகழவுள்ளது. குறிப்பாக நிலவானது சூரியனை வளைய வடிவில் மறைக்கின்ற அந்த முழு வளைய அமைப்பானது 3 நிமிடங்கள் 51 நொடிகள் தெரியவுள்ளது.