முன்னாள் மத்திய அமைச்சர் GK வாசன்
முன்னாள் மத்திய அமைச்சர் GK வாசன் பாஜகவில் இணைய இருப்பதாகவும், பாஜகவில் இணையும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனார். மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இவர் ஒரு முறை காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி திமுகவுடன் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவர். இந்நிலையில் மூப்பனார் மறைந்த பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன், அக்கட்சிக்கு தலைமை ஏற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைத்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில், பத்தாண்டுகள், மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலர், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி., என, பல பதவிகளை வகித்தவர், வாசன். காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கும், வாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், காங்கிரசை விட்டு விலகிய வாசன், த.மா.கா.,வை மீண்டும் துவக்கினார்.
அடுத்தடுத்து நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை, இது அக்கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களை சலிப்படைய செய்துள்ளது, மேலும் வாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி பெற பாஜகவின் அழுத்தமே காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தொடர் தோல்விகளில் இருந்து சரியும் அரசியல் செல்வாக்கை மீட்டு எடுக்கவும், மீண்டும் தேசிய அரசியலில் ஈடுபடவும் வாசன் விரும்புவதாகவும், இதையடுத்து விரைவில் அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்து தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் அமைச்சரவையில் பங்குபெற்ற வாசன் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை, நேர்மையாக செயல்பட்டவர் என்ற முகம் வாசனுக்கு உள்ளது, அத்துடன் பிரதமர் மோடியின் நேரடி அன்பை பெற்றவர் வாசன் என்பதால் அவர் பாஜகவில் இணைவது எந்தவித தடங்களும் இருக்காது என கூறப்படுகிறது.
பாஜகவில் வாசன் இணைவது உறுதியாகும் பட்சத்தில் அவர் மூலம் பாஜக வளர்ச்சி அடையுமா? அல்லது தமிழக அரசியலில் வேறு ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா? இல்லை வழக்கம் போல் வாசன் கட்சி பாஜகவுடன் இணையும் என்ற செய்தியில் மாற்றம் வருமா? என்பது வரும் நாட்களில் உறுதிப்படுத்தப்படும்