நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் மருத்துவர்கள்.
நெல்லை அரசு மருத்துவமனைக்கு முன்னாள் மருத்துவர்கள் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அந்த சமயத்தில் நாள்தோறும் 600க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிகமானோர் ஆக்சிஜன் தேவையுடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால் ஆக்சிஜன் நுகர்வு அதிகரித்தது.
இதையடுத்து மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் இருந்து தொடர்ந்து ஆக்சிஜனை பெற்று மாவட்ட நிர்வாகம் நிலைமையை சமாளித்தது. அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு உதவிகரமாக நெல்லையில் உள்ள பல்வேறு தனியார் அமைப்புகள், தொழிலதிபர்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வந்தனர்.
தனியார் அமைப்புகள் வழங்கி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையை சமாளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்திருந்தார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி வரும் சூழ்நிலையில் நெல்லை அரசு மருத்துவகல்லூரியில் பயின்ற முன்னாள் மருத்துவ மாணவர்கள் இன்று 36 லட்சம் ரூபாய் மதிப்பில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.
இதில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தலா 10 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மீதமுள்ள 50 செறிவூட்டிகள் தலா 5 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இரண்டாம் கட்ட அலையின் இக்கட்டான நேரத்தில் தனியார் அமைப்புகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக நின்று ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கி வரும் நிலையில் முன்னாள் மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.