உலக புகையிலை ஒழிப்பு தினம் மே-31

Update: 2021-05-30 18:51 GMT

உலக புகையிலை ஒழிப்பு தினம்

புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ஒரு போதைப்பொருளாகும். ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள். புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.

புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்!

புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பதெல்லாம் புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், இன்னொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை கொஞ்சம் மோசமானதுதான்.

உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்புவரை 60 லட்சமாக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்த 80 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. இவையெல்லாம் புகையிலை பயன்பாடுகளால் ஏற்படும் மரணங்கள். ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.

இந்தியாவில் என்ன நிலைமை? இந்தியாவில் வயதுவந்தோரில் 34.6 சதவீதம் பேர் புகை பழக்கம் உள்ளவர்கள் என்கிறது புள்ளிவிவரம். மொத்த எண்ணிக்கையில் 47.3 சதவீதம் பேர் ஆண்கள்; 20.7 சதவீதம் பேர் பெண்கள். 1998-ம் ஆண்டில் இந்தியாவில் புகை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.9 கோடிப் பேர். 2016-ம் ஆண்டில் இது 10.8 கோடியாக அதிகரித்தது. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கைக்கு அருகே இந்தியா வந்துவிட்டது.

புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம். இதை 34 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

Similar News