தி.மு.க. துணை பொது செயலாளர்-எம்.பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி சிகிச்சை பலனில்லாமல் இன்று இரவு காலமானார்.;
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி காலமானார் : அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி சிகிச்சை பலனில்லாமல் இன்று இரவு காலமானார்.
திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், எம்பியாகவும் இருப்பவர் ஆ.ராசா. இவரது மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பரமேஸ்வரிக்கு அளித்து வந்த கீமோதெரபி அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் அவருக்கு நோய் தொற்று தீவிரமானதாக கூறப்படுகிறது. மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆ.ராசா அவருடன் தங்கி அவரை கவனித்து வந்தார்.
இதனிடையே, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. அதுமட்டுமில்லாமல், விழுப்புரம் எம்பி ரவிக்குமார், ஆ.ராசாவின் மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பரமேஸ்வரியின் உடல்நிலை இன்று மேலும் மோசமடைந்து கவலைக்கிடமானது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவரும் மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தனர்.
அதன்பின்னர் பரமேஸ்வரியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி மனைவி பரமேஸ்வரி (53)இன்று இரவு 7.10 மணி அளவில் காரணமாக காலமானார்.அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.