திருச்சி விமான நிலையத்தில் ரூ. 86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது:
சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வளைகுடா நாடான சார்ஜாவிலிருந்து வெள்ளிக்கிழமை 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறப்பு விமானம் திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் இருவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர், இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களில் ஒருவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பழனி (39), மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தசெல்வராஜ் (28) என்பதும், இருவரும் தங்களது உடலுக்குள் முறையை 900 கிராம் மற்றும் 800 கிராம் என மொத்தம் 1,700 கிராம் தங்கத்தை (பசைவடிவில்) மறைத்து எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து, தங்கத்தை வெளியே எடுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக, சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 86 லட்சம் என சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.