திருமணத்தன்று ரூ.37.66 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கிய புதுமணத் தம்பதிகள்..!
திருமணத்திற்கு செலவு செய்ய திட்டமிட்ட பணத்தை, நிவாரண உதவி செய்ய நினைத்தனர். அதன்படி திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் ரூ. 37.66 லட்சம் பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர்களின் வாரிசுகள், திருமணமான கையோடு ரூ. 37.66 லட்சம் பணத்தை கொரோனா நன்கொடையாக வழங்கினர். திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரின் அருள்செல்வத்தின், 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணத்தை விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தனர்.ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக எளிமையான முறையில், காங்கயம்- வட்டமலை அங்காளம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. இதனால், திருமணத்திற்கு செலவிட திட்டமிட்ட பணத்தை நிவாரணம் வழங்கர முடிவு செய்து திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு 5 லட்சம் ரூபாயும், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ. 11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு ரூ. 2 லட்சம், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, ரூ.7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் என மொத்தம் ரூ. 37.66 லட்சத்தை புதுமண தம்பதியனர் வழங்கினர்.
கொரோனா நிவாரண நிதியாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன்பேரில், பல்வேறு நடிகர்கள், தொழில் நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இவ்வாறான நிலையில், திருமணத்திற்கு செலவிட திட்டமிட்ட பணம், திருமணம் எளிமையாக நடந்ததால், மிச்சமான பணத்தை கொரோனா நிவாரணமாக வழங்கியுள்ளது மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.