கல்குவாரி விபத்தில் 47 மணி நேரத்திற்கு பின் 4வது நபர் சடலமாக மீட்பு

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் 47 மணிநேரத்திற்கு பின், 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Update: 2022-05-17 00:45 GMT

நெல்லை மாவட்டம்,  பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளத்தில்,  கல்குவாரியில் ராட்சத கல் சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட செல்வம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனிடையே இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 3 பேரை மீட்கும் பணி, நேற்று இரண்டாவது நாளாக நடந்து வந்தது. இதில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் மற்றும் சுரங்கத்துறை நிபுணர்களும் ஈடுபட்டனர். திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மீட்பு பணி தொடங்கி நடந்து வந்தது.  மதியம் சுமார் 1.45 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்க முயற்சித்த போது மீண்டும் கற்கள் சரிந்து விழுந்ததால் 2 மணி நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

பின்னர்,  தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியின் அருகில் ஈடுபாடுகளில் சிக்கி கிடந்தவரை, இரவு 10.45 மணி அளவில், அதாவது  47 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்டனர், அவரை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டிய நிலையில் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும், நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், லாரி கிளீனராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மீட்கப்பட்ட அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முருகன் உடல் மீட்கபட்டதுடன் மீட்பு பணி முடித்துக் கொள்ளப்பட்டு மீண்டும் காலையில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் பணி, இன்று காலை தொடங்கியுள்ளது. தற்போது வரை, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News