ஸ்டாலினை மிஞ்சினார் நேரு: 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேச்சு
தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கப்போவதாக பேசி இருப்பதன் மூலம் ஸ்டாலினை மிஞ்சி உள்ளார் அமைச்சர் நேரு.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். தி.மு.க.வில் தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற வேண்டும் என்று தலைவர் நமக்கெல்லாம் உத்தரவிட்டு உள்ளார். இதை தொடர்ந்து தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க.வில் அடிக்கடி சொல்லுவார்கள். தங்களிடம் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறிக்கொண்டு இருப்பார்கள். அதனை நாம் மாற்றி தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை செய்ய வேண்டும். தற்பொழுது நமது கட்சியில் 90 லட்சம் பேர் உள்ளனர். ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தலைவர் கூறியுள்ளார். ஆனால் நாம் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க முன் வரவேண்டும்.
கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா சொல்லுவார். ஆனால் இன்றைக்கு நம்முடைய தலைவரின் செயல்பாட்டால் எதிரிகள் முன்னேறாத நிலையை அவர் ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது . மேலும் தி.மு.க.வினர் சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். எனவே அனைவரும் பொறுப்புணர்ந்து களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். நமது ஆதரவாளர்கள் இளைஞர்கள் அனைவரையும் திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கம் பழனியாண்டி, தொகுதி பொறுப்பாளர்களான சந்திரசேகர், உத்ராபதி செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த்,மண்டல குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தி.மு.க.வில் ஒரு கோடி ரூபாய் உறுப்பினர்கள் சேர்க்கவேண்டும் என கூறி உள்ள நிலையில் அமைச்சர் நேரு தலைவரையே மிஞ்சும் வகையில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என பேசி இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.