ஸ்டாலின் சவாலை ஏற்றார் எடப்பாடி... விவாதம் எப்போது? மக்கள் எதிர்பார்ப்பு
முக ஸ்டாலின் சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்சவால் விடுத்ததால் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி உள்ளது நீட் தேர்வு.;
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி தேர்வு எனப்படும் 'நீட்' தமிழகத்தில் தற்போது ஒரு அரசியல் விவாத பொருளாக மாறியிருக்கிறது. இந்தியாவிலுள்ள ஒருசில மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ள சூழலில் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்தேர்வு எதிர்ப்பு மனப்பான்மையில் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது நிலைப்பாட்டை எடுத்து உள்ளன.இன்றுவரை அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த சூழலில்தான் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணத்தையும் தெளிவாக அறிவித்து விட்டார்.
அதனை ஏற்றுக்கொள்ளாத மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வு ரத்து செய்ய கோரும் தீர்மானத்தை மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கவர்னர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.
இது ஒருபுறமிருக்க தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அரசியல் களத்தில் நீட் தேர்வு விவகாரம் மீண்டும் முக்கிய ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை யாற்றிய தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தான் நீட் தேர்வு நடக்கிறது. இதற்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். நீட் தேர்வு தொடர்பாக அப்போதைய தமிழக அரசு அனுப்பிய மசோதாவை இந்திய குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பியதை அவர்கள் மூடி மறைத்து விட்டார்கள். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசின் வழக்கறிஞர் தெரிவித்த பின்னர் தான் இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்தது.
மத்திய அரசுக்கு பயந்து எடப்பாடிபழனிசாமி பதுங்கி இருந்ததால்தான் தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் நீட் தேர்வு நடந்து வருகிறது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது நீட்தேர்வு வந்ததற்கு தி.மு.க.தான் காரணம், தி.மு.க.தான் காரணம் என பிரச்சாரம் செய்யும் பச்சை பொய் பழனிசாமி இதுபற்றி பொதுமேடையில் எங்களுடன் விவாதம் நடத்த தயாரா? நான் சவால் விடுகிறேன். எந்த இடத்தில் எப்போது கூப்பிட்டாலும் ஆதாரத்துடன் வந்து நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் அதை ஏற்றுக் கொள்வாரா? என்று கூறினார்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விடுத்த இந்த சவாலை எதிர்க் கட்சித் தலைவரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டார்.
இது தொடர்பாக தேர்தல் பரப்புரையில் அவர் பேசியபோது மரியாதைக்குரிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நீட்தேர்வு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறார்களா? என ஒரு சவால் விடுத்து இருக்கிறார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
நீட் தேர்வு வருவதற்கு காரணமான நச்சு விதை ஊன்றப்பட்டது தி.மு.க. ஆட்சிகாலத்தில் தான். இதை நாங்கள் எந்த மேடையில் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். நாள், தேதி குறிப்பிட்டு பத்திரிகையாளர்களும் வரட்டும் விவாதம் நடத்த நாங்கள் தயார். மக்களே நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும். தேர்தல் நேரத்தில் சவால் விட்டு விட்டு போய் விடக்கூடாது சவால் என்றால் சவால்தான் அதை நாங்கள் ஏற்க தயார் சும்மா விட்டுவிட மாட்டோம் என பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆக நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் மீண்டும் இப்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.நீட் தொடர்புடைய மாணவ செல்வங்கள் அதனை ஏற்பதா, வேண்டாமா தேர்வுக்கு படிப்பதா அல்லது விட்டுவிட்டு விதி விலக்கு கிடைக்கும் என படிக்காமல் இருப்பதா என தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில் தான் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இருவரும் விடுத்துள்ள சவால் இந்த அரசியல் களத்தில் மக்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
இது சம்பந்தமாக ஒரு இடம், தேதியை சவாலுக்கு சவால் விடுத்த தலைவர்கள் முடிவு செய்து பொதுமேடையில் அறிவிப்பார்களா? அது எந்த தேதியில் எந்த இடத்தில் நடைபெறும் என்பதே என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.