தேசிய விளையாட்டு போட்டி பிரச்சினை: மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகம் பங்கேற்க முடியாத விவகாரத்தில் மாநில உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-06-09 16:27 GMT

டெல்லி மற்றும் குவாலியர் நகரங்களில் கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கு பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களின் அலட்சியம் தான் காரணம் என பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விளையாட்டுப் போட்டி என்பதால் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை அனுப்பி வைக்கக் கோரும் கடிதங்கள் கடந்த மே 11 ஆம் தேதி முதலே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அழைப்புக் கடிதங்களைப் பார்த்து தொடர் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளத் தவறியதால் தான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை என புகார் எழுந்தது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாகவும், அண்மைக்காலங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது பற்றிய சுற்றறிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News