கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
பணியில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஒருகோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;
முதல்வர் ஸ்டாலின். (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையப் பகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் (53) இன்று பணியில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் அலுவலகத்தில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டார்.
தொடர்ந்து, திருநெல்வேலி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் லூர்து பிரான்சிஸ் (வயது 53) என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற லூர்து பிரான்சிஸை அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து உள்ளார். அவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது.
இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருக்கும்போது லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது.
தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. இந்தக் கொடிய சம்பவத்தில் உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.