கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும்.
மற்ற மாவட்டங்களில்,தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன்விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படலாம்
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடை பாதை கடைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்படும்.
உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. இ காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இயங்கலாம்
இனிப்பு, காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.
அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் , சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகவும் செயல்பட அனுமதி.
அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடனும், ஏற்றுமதி நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடனும் செயல்படலாம்.
மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் விற்பனை செய்யும் கடைகள், மிதிவிண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், வாகன விநியோகஸ்தர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள், கல்விபுத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலணி விற்பனை கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் மிக்சி, டிவி மற்றும் வீட்டு உபயோக மின் பொருட்கள் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், மொபைல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி
கட்டுமான பணிகளுக்கு அனுமதி
கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு அனுமதி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி
50 சதவீத பயணிகளுடன் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.