குரங்கு அம்மை பாதிப்பு: கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்;
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆய்வுக்கூட்டம் மற்றும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை என்பது தெரியவந்தது.
குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
பாதிப்புகள் இருந்தால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாதிப்பு வராது எனவும் சொல்ல முடியாது. குரங்கு அம்மை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் நம்மிடமே உள்ளது. இதுவரை குரங்கு அம்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் புனேவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டு, இங்கேயே பரிசோதிக்கப்படுகிறது என்று கூறினார்.