எதிர்கால தேவையை கொண்டே நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன: பிரதமர் மோடி
ஏழைகள் நலனை உறுதி செய்வதற்காகவே அனைத்து உட்கட்டமைப்பு துறைகளிலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக பிரதமர் மோடி கூறினார்;
நேரு உள் விளையாட்டு அரங்கில் 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பிலான 11 புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பேசிய பிரதமர் மோடி தமிழில் வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார்.
அவர் தனது உரையில், தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது என்பது சிறப்பான ஒன்று, இது ஒரு சிறப்பான பூமி. தமிழ்நாடும், தமிழ்நாட்டின் கலாசாரமும் மக்களும் சிறப்பு வாய்ந்தவை, ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலை சிறந்தவர்களாக உள்ளனர். செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் மொழி நிலையானது நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது.
கலங்கரை விளக்கம் திட்டத்தின்கீழ் வீடுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். எதிர்கால தேவையை நோக்கமாகக் கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இந்த விழா மேலும் ஒரு அத்தியாயம். தற்போது தொடங்கப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமான உலகத்தரம் வாய்ந்த திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. ஏழைகள் நலனை உறுதி செய்வதற்காகவே அனைத்து உட்கட்டமைப்பு துறைகளிலும் திட்டங்களை நிறைவேற்றுகிறோம்
பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது என பேசினார்.