அடுத்த ஆப்பு ரெடி: ஓடிபி பெற மினிமம் ரீசார்ஜ்?

இனி மொபைல் எண்ணுக்கு ஓடிபி பெற மாதாமாதம் ரீசார்ஜ் கட்டாயம் என மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது

Update: 2021-09-24 04:40 GMT

ஆரம்ப காலத்தில் செல்போன் விலையை விட சிம் கார்டுகளின் விலை அதிகமாக இருந்தது. இன்கம்மிங், அவுட்கோயிங் என இரண்டுக்குமே பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதன் பிறகு அதிகரித்த நெட்வொர்க் நிறுவனங்களால் போட்டி உலகமாக மாறி ஆஃபர்களை அள்ளி தெளித்தனர். ஆனாலும் மாதத்திற்கு 2 ஜிபி நெட்பேக்கை பார்த்து பார்த்து பயன்படுத்தினோம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என மாஸாக கால்பதித்தது ஜியோ. அதன்பிறகு இண்டர்நெட் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். ஆரம்பத்தில் இலவசமாக இண்டர்நெட் கொடுக்கப்பட்டது. மாதத்திற்கு 2 ஜிபி என்பது ஒரு நாளைக்கே 2ஜிபி என்ற அளவிற்கு அளித்தது. ஜியோ கொடுத்த ஆஃபர்களால் திக்குமுக்காடியது வாடிக்கையாளர்கள் மட்டுமே அல்ல. போட்டி நிறுவனங்களும் தான்.

ஜியோ மொத்தமா கொடுக்கும் போது நாம் ஒத்தையா கொடுத்தால் சரியாகுமா? என யோசித்த மற்ற நிறுவனங்கள் இறங்கி வரத் தொடங்கின. ஆனால் ஜியோ அளவுக்கு முடியவில்லை. இதனால் ஏர்டெல், வோடோபோன் என பயன்படுத்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அந்த சிம்கார்டை இன்கம்மிங்குக்கு மட்டுமே என பயன்படுத்தத் தொடங்கினர். பலரும் இண்டர்நெட் பேக்கேஜ் என்றால் ஜியோ தான் என்று ஒதுங்கத் தொடங்கினர். இதனால் ஏர்டெல், வோடோபோன் அடிவாங்கியது

ரீசார்ஜ் செய்யாததால், லாபமின்றி தவித்தன ஜியோவின் போட்டி நிறுவனங்கள். அப்போதுதான் இன்கம்மிங்குக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கையில் எடுத்தன. பல ஆண்டுகளாக பயன்படுத்தும் செல்போன் நம்பருக்கு இன்கம்மிங் முக்கியம் என்பதால், வாடிக்கையார்கள் ரீசார்ஜ் செய்தே தீர வேண்டிய கட்டாயம். தொடக்கத்தில் ரீசார்ஜாக ரூ.49 ஐ நிர்ணயம் செய்து தற்போது, அதனை ரூ.79ஆக அதிகரித்துவிட்டன.

இப்போது, ரூ.100க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ் இல்லை என அறிவித்துள்ளன. இப்போது வாட்ஸ் அப் வருகைக்கு பிறகு எதற்கு எஸ் எம் எஸ்? என்று தோன்றலாம். ஆனால் அங்கு தான் செக் வைத்துள்ளன.

வங்கி, UPI போன்ற பல செயல்பாடுகளுக்கு ஓடிபி அல்லது வேரிபிகேஷன் மெசேஜோ அதற்கு எஸ்எம்எஸ்-ஐ நாட வேண்டும். இப்போது செல்போனிலேயே வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறும் நிலையில் பல வெரிபிகேஷன் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட எண்ணில் இருந்து எஸ்எம்எஸ் செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே நடக்கும். இப்போது வேறு வழியே இல்லாமல், அதுவும் ரூ.100க்கு மேல் ரீசார்ஜ் செய்தே ஆகவேண்டிய கட்டாயம். எஸ்எம்எஸ் அனுப்பவதற்கு இப்போது மினிமம் ரீசார்ஜ் கொண்டுவந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்து எஸ்எம்எஸ் வர வேண்டுமென்றாலே மினிமம் ரீசார்ஜ் என்ற திட்டத்தை கொண்டு வரலாம். அனைத்துக்கும் ஓடிபிஐ நம்பி இருக்கும் நமக்கு வேறு வழியும் இல்லை

Tags:    

Similar News