ஒடிசாவிற்கு விரைந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள்

தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

Update: 2023-06-03 04:19 GMT

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தமிழர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைந்துள்ளனர்.

ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுராவில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடம் அருகே வந்தபோது அந்த ரயிலின் மீது ஒரு சரக்கு ரயில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் பயணிகள் அய்யோ அம்மா என அலறினார்கள். இந்த விபத்தில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 900 ஆக உள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி, ஒடிசா ரயில் விபத்த்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘ரயில் விபத்து குறித்து விவரம் விசாரிக்க அங்கு செல்கிறோம். ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசியுள்ளார். அங்கு சென்றவுடன் உங்களுக்கு மேலும் தகவல்களை தருகிறேன். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவமனை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது வேதனையளிக்கிறது. இவ்விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News