நெடுஞ்சாலை பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.. அமைச்சர் வேலு உத்தரவு...
நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து பொறியாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் வேலு பேசியதாவது:
எல்லாவித காலநிலைகளிலும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில், பாலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரண்டு சாலைகளையும் இணைப்பது பாலங்களே. பாலங்கள் கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்படுவதால், பாலம் கட்டுமானப் பணிக்கான செலவு அதிகரிக்கிறது. ஆற்றில் நீர் ஓடாத சமயத்தில் மட்டுமே கட்டுமானப் பணிகளை செயல்படுத்த வேண்டும்.
பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நீர் ஓடாத காலமாக இருப்பதால், பாலத்தின் அடித்தளப் பணிகள் மற்றும் பிலோசில் (Below Sill) பணிகளை விரைந்து முடிப்பதன் மூலம் பிற பணிகளை வெள்ள நீரோட்டம் இருக்கும் காலத்திலும் செயல்படுத்த முடியும்.
பாலம் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்னரே நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொண்டால் காலதாமதத்தை தவிர்க்க இயலும். அடித்தளம் வடிவமைக்க தேவையான மண் மாதிரிகள் உரிய இடங்களில், தேவையான ஆழத்தில் எடுத்து, ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சாலைப் பகுதியில் உள்ள மின் கம்பங்களை இடம் மாற்றுவது, தொலைபேசி கண்ணாடி இழை கம்பிகளை இடம் மாற்றுவது ஆகிய பணிகளை, பாலப்பணிகள் கட்டுமானம் நடைபெறும்போதே மேற்கொள்ள வேண்டும். அதனால் தேவையற்ற கால விரயத்தை குறைக்க முடியும்.
ரயில்வே மேம்பாலங்களுக்கான நேர்பாடு(Alignment) தேர்வு செய்யும் பொழுது, மின் கம்பங்கள், கண்ணாடி இழை கம்பிகள் குறைவாக உள்ள நேர்ப்பாட்டை தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் மற்றும் சாலை உபயோகிப்பாளரின் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் வொர்க் ஃபிரண்ட் (Work Front) எனப்படும். நிலம் மற்றும் அடுத்தடுத்து தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் அனுமதிகளை தாமதமின்றி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். வனத்துறையின் அனுமதி, நீர்வள ஆதாரத்துறை அனுமதி போன்ற பிற துறைகளின் அனுமதிகளை விரைந்து பெறுவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க இயலும்.
டிசைன் மிக்ஸ், ஜாப் மிக்ஸ், பைல் லோடு டெஸ்ட் போன்ற ஆய்வுப் பணிகளை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடியும். 1.4.2021 அன்று நிலுவையில் உள்ள மொத்த 306 பாலப் பணிகளில், 156 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
மேலும், கடந்த 2021-2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் எடுத்துக் கொள்ளப்பட்ட 775 எண்ணிக்கையிலான பாலப்பணிகளில், 567 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2022-2023 ஆம் ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட 276 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 634 பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் வேலு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், முருகேசன், கீதா, சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.