சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மைதனாங்கள், விளையாட்டு அரங்குகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கம், தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள வேளச்சேரி நீச்சல் குளத்தின் வளாகத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்துகின்ற வகையில் 50 மீட்டர் நீச்சல் குளம், பயிற்சி பெறும் வகையில் 25 மீட்டர் நீச்சல் குளம் மற்றும் டைவிங் நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. மேலும், சிந்தடிக் இறகுப்பந்துக் கூடம், ஜிம்னாஸ்டிக் அரங்கம் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூடம் ஆகியவையும் உள்ளன.
இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நீச்சல், இறகுப்பந்து மற்றும் உடற்பயிற்சிகள் (GYM) செய்து வருகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆய்வின்போது, வேளச்சேரி நீச்சல் குளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிட்டில் நடைபெற்று வருகின்ற உபகரணங்கள் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டார்.
மேலும், பார்வையாளர்கள் அமரும் இடம், இறகுப்பந்து கூடம், ஜிம்னாஸ்டிக் அரங்கம், உடற்பயிற்சி மையம் மற்றும் கழிப்பறை வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாணவர்கள், பொதுமக்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்து, பார்வையாளர்கள் அமரும் இடம் மற்றும் கழிவறை கட்டமைப்பு வசதிகளை நல்ல முறையில் பராமரித்திடவும், தேவையான மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.