தமிழக உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு

தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-10 12:11 GMT

தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு உதயநிதி ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.


பல்கலைக்கழகத்தில் உள்ள இறகுப்பந்து, வாலிபால் மற்றும் மேசைப்பந்து, உள் விளையாட்டு பயிற்சிக் கூடங்கள், உயிர் இயந்திரவியல் ஆய்வகம், சிந்தடிக் ஓடுதளம், தடகளம், கால்பந்து, ஹாக்கி மைதானங்கள். யோகா மையம், நூலகம், ஆராய்ச்சிக் கூடம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

மேலும், கருத்தரங்கக் கூடம், தியான மண்டபம் மற்றும் மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், விடுதி மாணவர்களிடம் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, மாணவ, மாணவியருக்கு எந்தவித குறையுமின்றி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.


மேலும், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் விளையாட்டு பயிற்சிக் கூடங்களை நல்ல முறையில் பராமரித்திடவும், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிடவும், ஒவ்வொரு மாணவர்களையும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குகின்ற வகையில் முறையான பயிற்சி அளித்திட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைவரும் விளையாட்டுப் பயிற்சியுடன் கல்வியிலும் முழுக்கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர், பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News