நாளை பிரதமரை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிரதமரை சந்திக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.;
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று அங்கு நடைபெற்ற கபடி போன்ற போட்டிகளை பார்வையிட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நாளை காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். பிரதமரை சந்திக்க அவருக்கு நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.