மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை பாளையங்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை பாளையங்கோட்டைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்.;

Update: 2023-12-18 12:30 GMT
நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை பாளையங்கோட்டை மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ம் தேதிகளில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்கள் பெய்த பலத்த மழையை தாங்க முடியாமல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களும் வெள்ளக்காடானது. முக்கிய சாலைகள் எல்லாம் தண்ணீர் தேங்கியதால் ஏரிகள் போல் காட்சியளித்தன.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை படகுமூலம் மீட்டு நிவாரண முகாம்களில்  தங்க வைத்தனர். சுமார் 10 நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் அங்கு வெள்ளம் நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள எல்லா அணைகளும் நிரம்பி விட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக  அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டது .

இதன் காரணமாக நெல்லை ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. நெல்லை நகரின் பல இடங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. அது மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி நகரின் பல தாழ்வான பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாள் இரவில் 94 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .இதை போல் திருச்செந்தூரில் 64 சென்டிமீட்டர் மழையும், சாத்தான்குளத்தில் 48 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் திருச்செந்தூர் தனி தீவு போல் காட்சி அளிக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டே இருப்பதால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வருகிற 19 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையினால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் மற்றும் மானாவாரி பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும் கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற மழை பெய்யவில்லை என்றும் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கோவையில் இன்று அரசு விழாவில் பங்கேற்று விட்டு டெல்லி செல்வதால் தனது மகனும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லைக்கு வந்தார். பாளையங்கோட்டையில்  உள்ள ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் கூறினார்.

Tags:    

Similar News