கோவில் பணியாளர்களுக்கு இலவச உடல் பரிசோதனை திட்டம்

கோவில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தினை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்;

Update: 2024-03-12 15:02 GMT

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் சேகர்பாபு 45,477 கோவில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சியில் அமைக்கப்படாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவினை அமைத்து, அதன் உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இக்குழுவின் முதல் கூட்டமும், அதனைத் தொடர்ந்து 27.2.2024 அன்று 2-வது கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழு தீர்மானங்களை நிறை வேற்றிடும் வகையில் இன்று 45,477 கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மண்டலம் – 1 மற்றும் 2 ஐ சேர்ந்த 1,277 கோவில் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் முழு உடற்பரிசோதனை திட்டத்தில் முழு ரத்த பரிசோதனைகள், கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

இம்முகாம் மூன்று நாட்கள் நடை பெறும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன.

மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளனர். கோவில் பணியாளர்களுக்கான முழுஉடல் பரி சோதனை முகாம் சென்னை மண்டலத்தை தொடர்ந்து 6 மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு பணியாளர்களின் நலன் காக்கப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரி பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News