அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் 11-வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் 11-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-11-22 17:39 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் டிரைவர். கண்டக்டர் உள்பட பல்வேறு பணிகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு வேலை வழங்காமல் ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் முதலில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஐகோர்ட் உத்தரவுப்படி அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக  தோல்வியை தழுவியது.  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பதவி ஏற்றது. அப்போது கட்சி மாறிய அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க. அமைச்சரவையிலும் முக்கிய இலாகாவை பிடித்தார். அவருக்கு மின்சாரம் மற்றும் ஆயத்தீரவை  துறை வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அமலாக்க துறையினர் கைது செய்ததும் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.ஒவ்வொரு முறையும் அவருடைய சிறைகாவல் காணொளி காட்சி மூலம் நீடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வருகிற 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் உடல்நல குறைவு காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறைகாவல் முடிவடைந்து விட்டதால் இன்று காணொளி காட்சி மூலம் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சிறை காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் சிறைகாவல் 11 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News