அமலாக்க துறை கைது செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை

அமலாக்க துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-06-20 11:48 GMT

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மா. சுப்பிரமணியன்.

உடல்நிலைக் குறைபாடு காரணமாக காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அப்போது  வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்து தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரானார்.

இந்நிலையில்  ஏற்கனவே உள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14ம் தேதி அதிகாலை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அறுவை சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், நாளை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News