செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்:
செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தும் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெறவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.;
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பண மோசடி தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்றும் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை அமலாகத்துறையினர் ஆன்லைன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தனர்.
அதன்பின்னர் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுதது செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.