அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஜன. 22ல் குற்றச்சாட்டுகள் பதிவு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஜன. 22ம்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-01-11 12:19 GMT

நீதிமன்றம் முன் கானொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 16வது முறையாக அவருக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வரும் 22ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்னதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களை வென்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தாலும், கொங்கு பகுதி என்பது அக்கட்சிக்கு மிகுந்த சவாலானதாகவே இருந்து வந்தது. இந்த கள நிலவரத்தை மாற்றியமைக்க களமிறக்கப்பட்டவர் தான் செந்தில் பாலாஜி. இவருடைய அதிரடி பணியால் தி.மு.க. திகு திகுவென அங்கு வளர தொடங்கியது. இப்படி இருக்கையில் தான் திடீரென களத்தில் குதித்தது அமலாக்கத்துறை.

அதாவது கடந்த அதிமுக ஆட்சியல் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த போது வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக வழக்கு நடந்து வந்தது. இது தொடர்பான  சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒருமாதம் வரை மருத்துவமனையில் இருந்த அவர் பின்னர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து ஜாமீன் கேட்டு அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரித்து வருவதால் ஜாமீன் குறித்த மனுவையும் இந்த நீதிமன்றமே விசாரிக்கும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. தீபாவளிக்கு வந்துவிடுவார், புத்தாண்டுக்கு வந்துவிடுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒவ்வொரு முறையும் ஜாமீன் மறுக்கப்பட்டே வந்தது.

இறுதியாக பொங்கலுக்காவது அவர் வெளியேற வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய தினம் காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக 2 மனுக்கள் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், கைது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் விதிகளை மீறி போலி ஆவணங்களை தயாரித்தும், திருத்தியும் உள்ளதாக அமலாக்கத்துறை மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டிப்பு செய்யக்கூடாது, அனைத்து ஆவணங்களையும் முறையாக அமலாக்கத்துறை வழங்காமல் விசாரணையை தொடர்வது முறையற்றது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் ஜன.22ம் தேதியன்று சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும், அன்றைய தினம் அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி எஸ்.அல்லி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News