அரசு ஹாஜிக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு ஹாஜிக்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கருத்துகளை கேட்டறிந்தார்.

Update: 2023-07-09 14:17 GMT

சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

தமிழ்நாடு மாவட்ட அரசு ஹாஜிகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை நந்தனம் நவாப் பஸீலத்துன் நிஸா பேகம் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை வகித்தார். தமிழ்நாடு தலைமை ஹாஜியின் பிரதிநிதி அக்பர் அலி முன்னிலை வகித்தார்.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் சார்ந்த பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு, உரிய பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றித் தரப்படும் என்று பேசப்பட்டது. மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹாஜிக்களின் கருத்துகளை கேட்டறிந்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஹாஜி மற்றும் தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்புத் தலைவர் ஸலாஹுத்தீன் உமரீ ஃபாஜில் ஜமாலீ ஹள்ரத், கூட்டமைப்பின் செயலாளர்கள் முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, கஸ்ஸாலி மழாஹிரி ஹழ்ரத் மற்றும் தமிழகத்தின் 25 மாவட்ட அரசு ஹாஜிகள் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஈரோடு மாவட்ட அரசு காஜி, மாவட்ட அரசு ஹாஜி, தர்மபுரி மாவட்ட அரசு ஹாஜி, கரூர் மாவட்ட அரசு ஹாஜி, உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். ஹாஜிக்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதுகுறித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

Tags:    

Similar News