மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Update: 2024-01-21 09:46 GMT

அமைச்சர் சேகர்பாபு.

ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.

பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுப்பு நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அறநிலையத்துறை கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கோயில்களில் நாளை ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என்ற தகவலுக்கு இந்து சமய அறிநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அன்னதானம் உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகளுக்கு கோயில்களில் நாளை கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

Tags:    

Similar News