அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் வைக்கப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வுக்கு பாஜ.,வினரும் அங்கு கூடியிருந்தனர். அப்போது அரசு நிகழ்ச்சிக்கு கட்சியினர் குவிந்தது ஏன் என தியாகராஜன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அவருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.