நிதியுதவி கொடுத்த அமைச்சர்: வாங்க மறுத்த மணிகண்டன் குடும்பத்தினர்
மணிகண்டன் தந்தை லட்சுமணன் பணத்தை வாங்க மறுத்து விட்டார். குடும்பத்தினர் பணம் கொடுத்த கவரை கீழே போட்டனர்.;
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், நிதி உதவி வழங்கினார். அந்த தொகையை வாங்க மறுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் மணிகண்டர் வீடு திரும்பிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், உயிரிழந்த மணிகண்டனின் ஊருக்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். மணிகண்டன் தந்தை லட்சுமணன் பணத்தை வாங்க மறுத்து விட்டார். குடும்பத்தினர் பணம் கொடுத்த கவரை கீழே போட்டு விட்டு அரசு வேலை வேண்டும் என நெருக்கடி கொடுத்ததால் அமைச்சர் உடனடியாக கிளம்பி சென்றார்.
இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் பணத்தை எடுத்து வந்து உயிரிழந்த மணிகண்டனின் வீட்டிற்கு முன்பாக வைத்து விட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.