நகராட்சி, பேரூராட்சி தரம் உயர்வு குறித்து அமைச்சர் நேரு அறிவிப்பு

நகராட்சி, பேரூராட்சி தரம் உயர்வு குறித்து அமைச்சர் நேரு சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-06-27 14:20 GMT

அமைச்சர் நேரு.

அடுத்த இரண்டு நாட்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து சட்டசபையில் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதேபோல் பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் விரைவில் நகராட்சி, மாநகராட்சி தரம் உயர்த்துதல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவது தொடர்பான கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்தார்.

அப்போது கே.என் நேரு கூறுகையில், "தளி தொகுதி தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 2024-25ம் ஆண்டு மூலதன மானியத்திட்டத்தின் கீழ் , புதிய அரசு அலுவலக கட்டிடம் கட்ட 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு பணி மேற்கொள்ள தொடர் நடவடிக்கை உள்ளது. விரைவில் புதிய அரசு அலுவலக கட்டிடம் கட்டித் தரப்படும் என்றார்.

தொடர்ந்து தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் பேசுகையில். தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு புதிய அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருக்கிறார். அதற்காக அமைச்சருக்கும் அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சி என்பது 18 வார்டுகள் உள்ளடங்கி, 33 ஆயிரத்து 700 பேர் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் ஊராக உள்ளதால் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்று என்று எம்எல்ஏ ராமச்சந்திரன் கூறினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேரவையில் இரண்டு நாட்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது. தேவையான இடங்களை இச்சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தரம் உயர்த்துவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனிடையே திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திரு.வி.க நகர் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 70 வது வார்டு இஎஸ்ஐ-ஏ (Esi -A) குடியிருப்பு பகுதியில் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றிகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழ்நாட்டில் 388 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்க்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 330 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இதில் 246 பணிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் ஒதுக்கிட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் புதிதாக 202 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக 2,300 கோடி நிதி பெற்று பணிகள் மேற்கொள்வதற்கான பரிசீலனை மத்திய அரசிடம் உள்ளதாகவும். மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் விரைவில் பணிகள் துவங்கப்படும் என்றும் அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Tags:    

Similar News