கடலூரில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசிய அமைச்சர்

கடலூரில் தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2022-06-29 11:57 GMT

செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகள் வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வாங்கி வருவதாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் கோபமடைந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கேள்வி கேட்ட செய்தியாளரிடம் நீ உரம் வாங்கினாயா? என்று கோபமாக  கேட்டார். அதற்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்த புகார் தெரிவிக்கப்பட்டதாக செய்தியாளர் கூறினார். அதற்கும் கோபப்பட்ட அமைச்சர், எந்த விவசாயி சொன்னான்? நீ சொல்லுயா என்று ஒருமையில் கூறிவிட்டு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் கையிருப்பில் உள்ளது . தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, உரம், பொட்டாஷ், டிஏபி, 54 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது என்று கூறினார்

Tags:    

Similar News