தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலா? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் உண்டா என்பதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.;
உலகின் பல நாடுகளை, குரங்கு அம்மை அல்லது குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து, பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கேரளாவில் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெருவில் புதிய மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் முதியோர் சிகிச்சை மருத்துவமனையில் கட்டிடத்தின் தரம், ஸ்திரத்தன்மை குறித்து உறுதிப்படுத்த ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்கின்றனர்.
அந்த ஆய்வுஅறிக்கை அடிப்படையில், ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.