மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள நல்ல செய்தி

உயர் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடம் தொடர்பாக மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்ல செய்தி தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-12 15:20 GMT

அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான 50 சதவீத இடங்களை தமிழக அரசே நிரப்பிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் உள்ள 50 சதவீதஇடங்களை தமிழக அரசே நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக ஒதுக்கீட்டிற்கான 50 சதவீத இடங்களில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் 25 சதவீத இடங்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மீதம் உள்ள 25 இடங்களிலும் சேர்க்கப்படுவர்.

ஏற்கனவே முதுகலை மருத்துவ படிப்பில் கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள இடங்களுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பட்டாசு விபத்தால் காயமடைந்தவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு அமைச்சர் இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

Similar News