டிசம்பருக்குள் 70% நெடுஞ்சாலைத்துறை பணிகளை முடிக்க வேண்டும் -அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

அனைத்து நெடுஞ்சாலைத்துறை பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.;

Update: 2021-10-30 16:11 GMT

நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் பணி முன்னேற்றம் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார்.

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இன்று (30.10.2021) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத்துறை பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு, அனைத்து நெடுஞ்சாலைத்துறை பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டுமானங்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் OMR சாலையில் 5- பாலைங்கள் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். எண்ணூர், தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோவில், மகாபலிபுரம் வரை செல்லும் சென்னை எல்லை சாலை பணிகள் விரைவில் தொடங்கிட அறிவுறுத்தினார்.

சென்னை மாநகர எல்லைக்குள் நடைபெறும் பெருங்களத்தூர் மேடவாக்கம் மேம்பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.மற்றும் கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரை நிலம் கையகப்படுத்தும் பணி குறித்தும் ஆய்வு செய்தார்.

சென்னை - கன்னியாகுமரி சாலைப்பணி குறித்து ஆய்வு செய்த போது இதுவரை மேற்கொண்ட செலவினம் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அரசு ஒவ்வொரு திட்டங்களுக்கும் தேவையான நிதியை உடனுக்குடன் வழங்கி வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத பணிகள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்ய ஏற்படும் கால தாமதத்தை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். உலகத்தரம் வாய்ந்ததாக பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தர பரிசோதனை மையங்களை ஆய்வு செய்து அதைப்போன்ற தர பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

சாலைப்பணிகள் எப்போது நிறைவு பெறும், இதுவரை சாலைப் பணிகளுக்கு மேற்கொண்ட செலவினம் போன்றவற்றையும் சில மாவட்டங்களில் பஞ்சாயத்து தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் தொடங்கப்பட்ட விபரம், ஒரு சில சாலைப்பணிகள் ஒரு மாத காலத்தில் நிறைவு பெற வாய்ப்புள்ளதாகவும் அமைச்சருக்கு அலுவலர்கள் விளக்கி கூறினார்கள்.

தலைமைப் பொறியாளர் மெட்ரோ பணிகள் குறித்தும், இதர தலைமைப் பொறியாளர்கள் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டார். நீதிமன்ற நடவடிக்கைகளால் காலதாமதம் ஏற்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சாலை மேம்பாலங்கள் ரயில்வே மேம்பாலப் பணிகள் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளில் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார்..

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினை லாபகரமாக செயல்பட செய்ய தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தீரஜ்குமார், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, K.பாஸ்கரன் இ.ஆ.ப., சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டம், B.கணேசன் இ.ஆ.ப. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், S.சிவசண்முகராஜா இ.ஆ.ப., தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பூம்புகார் கப்பல் கழகம், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலகர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News