மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம்
எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி.
தமிழ் திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர். 1936 இல் வெளியான சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக நடித்து, அண்ணாவின் அரசியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனி கட்சியை தொடங்கி, அதன் நிறுவனராக மாறினார். இதையடுத்து சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.
1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 70வது வயதில் எம்ஜிஆர் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் வரை அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த இடம் எம்ஜிஆர் நினைவிடம் என அழைக்கப்படுகிறது
எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , சசிகலா உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அவரை தொடர்ந்து காலை 11 மணிக்கு ஓ.பன்னீர்செல்வமும், பகல் 12 மணிக்கு சசிகலா தரப்பினரும், பிற்பகல் 12.30 மணியளவில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் எம்ஜிஆர் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் காரணமாக எம்ஜிஆர் நினைவிடத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி: அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, எம்.ஜி.ஆர்-க்கு எங்கள் புகழஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி, சின்னம் என்றால் இரட்டை இலை, தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைக்கோடி மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்து, அஇஅதிமுகவிற்கு வெற்றியை மட்டுமே பரிசாகக் கொடுத்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை போற்றி வணங்குகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.