சித்தர் முறைப்படி பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.;
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர்.
உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். பங்காரு அடிகளாரின் மரணச் செய்தியை அறிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. இறுதி சடங்கு நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அமர்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க கோஷங்கள் எழுப்பினர்.
அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, சக்தி பீடத்திலுள்ள தியான மண்டபத்துக்கு அவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், பங்காரு அடிகளார் அருள்வாக்கு சொன்னபடி, கோயில் கருவறைக்கும், புற்று மண்டபத்துக்கும் நடுவில் நின்ற நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தில்தான் முதலில் அவர் அருள்வாக்கு சொன்னார் எனக் கூறப்படுகிறது. அதனால், அந்த இடத்தில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என பங்காரு அடிகளார் ஏற்கனவே அருள்வாக்கில் கூறியதாக சொல்லப்படுகிறது.
பங்காரு அடிகளாரின் உடல், சித்தர் முறைப்படி பால், பன்னீர், சந்தானம், குங்குமம், மஞ்சள், இளநீர் கொண்டு உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வில்வம், துளசி, வேப்பிலை, மஞ்சள், குங்குமம், சவ்வாது, உப்பு, விபூதி போடப்பட்டு உட்கார்ந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடிகளார் அருள்வாக்கு சொல்லும் புற்று மண்டபம் கருவறை அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 3 முறை வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செலுத்தினர்.
நல்லடக்கத்தையொட்டி மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், பக்தர்களின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்காரு அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.