மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்;

Update: 2023-10-19 14:02 GMT

பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூரில் இயங்கி வரும் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார்.ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.

மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள். இவர், ஆசிரியராக இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

1970-களின் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் தொண்டாற்றி வருகின்றன.

பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. 

பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு மத்திய அரசுபத்மஸ்ரீ விருது வழங்கியது .

82 வயதாகும் பங்காரு அடிகளாருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இன்றும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. அவருக்கு மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு அதனை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இவரது மறைவை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், டிடிவி தினகரன், எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News