எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை தொடக்கம்!
எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், இரண்டு இணை இயக்குநர்கள் கொண்ட மருத்துவக்குழு தனியார் மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கி உள்ளது.;
புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்த டிவி நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் மகன் ஹேமச்சந்திரன். இவர் உடல் பருமனைக் குறைப்பதற்காக சென்னை பம்மல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அனைத்து பரிசோதனைகளையும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் பெருங்கோ மேற்கொண்டதாக செல்வநாதனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஹேமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து அவரின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் செல்போன் வாயிலாக இரங்கல் தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இது தொடர்பாக விசாரணைக்குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதனை அடுத்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு இணை இயக்குனர்கள் கொண்ட மருத்துவக்குழு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையைத் துவக்கி உள்ளது என்றும், அவர்கள் ஹேமச்சந்திரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் அரசுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் கூறியுள்ளார்.