ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் சந்திப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்

ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் என்ன? என கே .பாலகிருஷ்ணன் கேள்வி

Update: 2022-08-09 15:39 GMT

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது. அந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினியின் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் ஆளுநருடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, முதலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று சொன்னார் ரஜினி. அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆளுநர் உடன் அரசியல் குறித்தும் பேசினேன் என்று தெரிவித்தார். என்ன அரசியல் பேசினீர்கள் என்று கேட்டதற்கு, அது குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்று சொன்னார்.

இப்போது அது தான் பிரச்சனையாகியுள்ளது. ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது? என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். மேலும், ஆளுநர் மாளிகை அரசியல் அலுவலகமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கவர்னரை ரஜினி சந்தித்தற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே .பாலகிருஷ்ணனும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது' எனவும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்? என்று ஆவேசமாக கூறினார் 

Tags:    

Similar News