தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?

வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Update: 2024-04-17 15:30 GMT

மன்சூர் அலி கான் 

8வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில், இந்திய புலிகள் கட்சி சார்பாக வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிரமாக இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில், கடந்த ஒரு மாதமாக பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த மன்சூர் அலிகான், இன்று இறுதிகட்டமாக வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், உடனடியாக அவரை குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி பெற்று வந்த மன்சூர் அலிகான், உடனடியாக மேல் சிகிச்சைக்காக குடியாத்தத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தடைந்த மன்சூர் அலிகான், சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News