காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது

காரைக்கால் தேரோட்டம் வீதியுலாவில் மாங்கனிகளை வீசி இறைத்து வழிபடுதல் நடைபெற்று வருகிறது;

Update: 2023-07-02 05:02 GMT

63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இங்கு, அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா காரைக்காலில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை 30ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு விழாவும் ஜூலை 1ஆம் தேதி பரமதத்தர் புனிதவதி திருமணமும் நடை பெற்றது. ஜூலை 2ஆம் தேதி இன்று பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா மாங்கனிகளை வீசி இறைத்து வழிபடுதல் நடைபெற்று வருகிறது

பிள்ளை வரம் கிடைக்கும்: திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருவீதி உலா வரும் போது மாங்கனிகளை இறைத்து வழிபடுவது வழக்கம். வேண்டுதலாக பக்தர்கள் இறைக்கும் மாங்கனியை ஏராளமானோர் பிரசாதமாக எடுத்துச்சென்று சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


3ம் தேதி அம்மையார் காட்சி கொடுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாங்கனி பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும். 30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படும். சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டது.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய வீதிகள் பாரதியார்சாலை, கன்னடியார் வீதி. பெருமாள்கோவில் வீதி.திருநள்ளார் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாங்கானி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாக்கும் வகையில் 100 இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது

காரைக்கால் அம்மையார் வரலாறு:

காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவரை நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார் சிவன். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார். அதற்கு சிவனடியார் ''அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!'' என்றார்.

அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார்.

மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான்.

புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார்.

தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால் இறைவனை வேண்டி பேய் உருவமாக மாறி காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார்.

அதற்கு அம்மையார்,இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்'' என்று கேட்டார். உடனே சிவபெருமான், ''அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்'' என்று அருளினார்.

அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News