பிரதமர் மோடியை அப்துல்கலாமுடன் ஒப்பிட்ட மல்லை சத்யா: மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தனது ஃபேஸ்புக்கில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.;

Update: 2022-04-25 10:37 GMT

கோப்பு படம் - மல்லை சத்யா , வைகோ.

மதிமுக துணை பொதுச்செயலாளரும், மாமல்லபுரம் தமிழ்ச் சங்க தலைவருமான மல்லை சத்யா சிறந்த தமிழ் ஆர்வலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவார். ஆண்டுதோறும் சிறந்த தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி சாதனையாளர்களை ஊக்கப்படுத்துபவர். இவர் நேற்று முன் தினம் தனது பயணத்தின் போது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இசைஞானி இளையராஜா ஒப்பிட்டது மிகப்பெரும் சர்ச்சையாகியது. அந்த வைரல் ஓயும் முன்னர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு மல்லை சத்யா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மாமல்லபுரம் தமிழ்ச் சங்கம் தொடர்பாக மல்லை சத்யா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது:- 

மதச்சார்பற்ற இந்திய திருநாட்டின் சிறந்த மூன்று ஆளுமைகள் ஏழ்மை நிலையில் வாழ்க்கைப் பயணத்தை துவங்கி ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்த மூவேந்தர்கள்

மாண்புமிகு மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்

மாண்புமிகு இந்திய பிரதமர் திருமிகு நரேந்திர மோடி

உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அண்ணாச்சி

வி ஜி சந்தோஷம் அவர்கள் இம்மூவரும் வெவ்வேறு துறைகளில் முத்திரை பதித்து புகழின் உச்சம் தொட்டு இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றார்கள்

இந்துக்களின் மிக முக்கிய புனித ஸ்தலமான ராமேஸ்வரம் தீவில் பிறந்து படிக்க பள்ளிக்கு செல்லும் முன் வீடு வீடாக சென்று பத்திரிகைகள் போட்டுவிட்டு படித்து முன்னேறி தன்னுடைய அசாத்திய திறமையால் 1998-ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை நடத்தி அணு ஆயுத வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரகடனப்படுத்திய அணு விஞ்ஞானியாக இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு மக்கள் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்களின் திருக்கரத்தால் தனது கால்சட்டை பருவத்தில் தூங்கி எழுந்தவுடன் வேலைக்கு செல்லும் முன் வீடு வீடாக சென்று தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களைப் போட்டுவிட்டு தன் வியர்வையை பாசனமாக்கி தன் உழைப்பை மூலதனமாக கொண்டு உலகத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட திருவள்ளூர் சிலைகளை உலகப் பரப்பில் இதுவரை 140 நிறுவிய பெருந்தமிழன் அண்ணாச்சி சந்தோஷம் அவர்கள் திருவள்ளூர் தூதுவர் என்ற விருதை பெற்றார்.

அதேபோன்றுதான் கால்சட்டை பருவத்தில் தேனீர் வியாபாரம் செய்து தன் அயராத உழைப்பின் காரணமாக படிப்படியாக திறமையின் அடிப்படையில் அரசியலில் உயர்ந்து தேசபிதா மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சராக பின்பு மாண்புமிகு இந்திய பிரதமர் ஆக உயர்ந்திருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களின் திருக்கரத்தால் தேனீர் கடையில் பணியாற்ற செல்லும் முன் சைக்கிளில் வீடு விடாக தினத்தந்தி நாளிதழில் போட்டு இன்று சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழும் கோல்டன் பீச் ரிசார்ட் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவின் தலைவராக உழைப்பால் உயர்ந்து நிற்கும் பெருந்தமிழன் வி ஜி சந்தோஷம் அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார் இந்த முக்கோண சந்திப்பை எண்ணி எண்ணி உள்ளம் புரிப்படையும்

என்று மலை சத்யா தனது முகநூல் பக்கத்தில் கூறியிருந்தார். மதிமுகவில் சர்ச்சை இதற்கு மதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தராஜ் என்கிற ஆறுமுகம் தமது முக நூல் பக்கத்தில், மோடி அவர்களை இளையராஜா அவர்கள் பாராட்டி பேசி, பல்வேறு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் மோடி அவர்களை போற்றுதலுக்குரிய அப்துல் கலாம் அவர்களுடன் ஒப்பிட்டு முத்திரை பதித்தவர் என்று பாராட்டி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுகவில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு தரப்பும் சரி, தவறு என்று தங்கள் விவாதங்களை வலைதளங்களில் பதிவு செய்து வருவது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Tags:    

Similar News