முக்கிய ரயில்கள் ரத்து: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், நவம்பர் 7 ஆம் முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-11-03 14:26 GMT

மதுரை பத்திரிகா என்ற உள்சுற்று இதழ் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர்.

மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சம்பந்தமான விநாடி-வினா போட்டியில் 40 ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். விநாடி- வினா நிகழ்ச்சியை அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் நடத்தினார்.

இந்தப் போட்டியில் ரயில்வே பொது பிரிவை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் தங்கம், திவ்யா, கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய குழு முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து, அலுவல் மொழி துறை சார்பில் "மதுரையில் பத்திரிகா" என்ற உள் சுற்று இதழ் வெளியிடப்பட்டது.

உள் சுற்று இதழை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் வெளியிட்டார். முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், நிதி மேலாளர் இசைவாணன், கோட்ட ஊழியர் நல அதிகாரி மனோஜ், அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம் வருமாறு:

ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில் பாதைகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக நவம்பர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை சிறப்பு ரயில் (06664) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) நவம்பர் 8, நவம்பர் 10 முதல் 12 வரை, நவம்பர் 28 முதல் 30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை நவம்பர் 18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நவம்பர் 22, 25, 26 ஆகிய நாட்களில் சென்னை - குருவாயூர் ரயில் தாமதமாக வருவதால் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடைக்காது.

மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு:

மதுரையில் இருந்து தெலுங்கானாவில் உள்ள கச்சக்குடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி (வண்டி எண் 07191) கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் கச்சக்குடாவில் இருந்து நவம்பர் 7 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் (வண்டி எண் 07192) மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் மதுரையில் இருந்து நவம்பர் 9 முதல் பிப்ரவரி 1 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மறுநாள் காலை 7.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம் விருத்தாச்சலம் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு:

விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயிலின் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 19 முதல் டிசம்பர் 31 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 20 முதல் ஜனவரி 1 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News